ஹார்முஸ் ஜலசந்தியை இழுத்து பூட்டிய ஈரான்!! முடங்கியது போக்குவரத்து! 700 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தம்!
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய நாடுகளின் ஏற்றுமதி கப்பல்கள் செல்லும் ஒரே கடல் பாதையான அப்பிராந்தியத்தின் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், 700 எண்ணெய் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
துபாய்/லண்டன்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் உருவான போர் பதற்றத்தில், உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் 700க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்கியுள்ளன. உலக எண்ணெய் சப்ளைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஒரே பாதை. ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இதன் வழியாகவே நடக்கிறது. தினசரி சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் (உலகின் 20 சதவீதம்) இங்கு பயணிக்கிறது. ஈரான் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்த, ஈரான் ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பலையும் தாக்குவோம் என எச்சரித்தது. IRGC அதிகாரிகள் "ஒரு துளி எண்ணெயும் வெளியேற விடமாட்டோம்" என அறிவித்தனர்.
கடல் போக்குவரத்து ஆய்வு நிறுவனங்களான விண்ட்வர்ட், கெப்லர், லாயிட்ஸ் லிஸ்ட் ஆகியவை வெளியிட்ட தகவல்களின்படி, மார்ச் 1 அன்று வெறும் 3 எண்ணெய் கப்பல்கள் மட்டுமே (28 லட்சம் பேரல்) சென்றன. இது சராசரி 1.98 கோடி பேரலுடன் ஒப்பிடுகையில் 86 சதவீத சரிவு. நேற்று அதிகாலை வரை ஒரு சிறிய எண்ணெய் கப்பலும் ஒரு சரக்கு கப்பலும் மட்டுமே கடந்தன. ஜலசந்தியின் இருபுறங்களிலும் 706 கச்சா எண்ணெய் கப்பல்கள் (சில அறிக்கைகளில் 150-200 எனவும்) நிறுத்தப்பட்டுள்ளன. சில கப்பல்கள் தாக்குதலால் சேதமடைந்தன, இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: இன்னும் 10 நாள் போர் நடந்தா அவ்வளவு தான்!! ஆயுதப்பற்றாக்குறை வரும்!! எச்சரிக்கும் பென்டகன்!
இதன் தாக்கம் உடனடியாக சந்தையில் பிரதிபலித்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 80 டாலரை தொட்டது (சில இடங்களில் 82 டாலரை நெருங்கியது). சவுதி அரேபியாவின் அராம்கோ சுத்திகரிப்பு நிலையம், கத்தார் எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டதால் ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. கப்பல் காப்பீடு ரத்து, போர் ரிஸ்க் பிரீமியம் உயர்வால் பல நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தின.
இந்த நிலை சில வாரங்கள் நீடித்தால், சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ரஷ்யா போன்ற மாற்று ஆதாரங்களை தேட வேண்டிய சூழல் ஏற்படும். உலக பொருளாதாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கா கடற்படை மூலம் கப்பல்களை பாதுகாக்க தயாராக உள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!