×
 

சரக்கு கப்பல்களை தாக்கிய ஈரான்!! 3 கப்பல்கள் நாசம்! ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில், மூன்று சரக்கு கப்பல்களை ஈரான் ராணுவம் தாக்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தற்காலிக போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குள், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் மையம் (UKMTO) வெளியிட்ட தகவலின்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று சரக்கு கப்பல்களை ஈரான் ராணுவம் திடீரென தாக்கியது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் எந்த முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பல்கள்:

  • சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சொந்தமான எம்.எஸ்.சி. நிறுவனத்தின் ‘பிரான்செஸ்கா’
  • கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ‘யுபோரியா’
  • ‘எபாமினோட்ஸ்’ (இந்தக் கப்பல் துபாயில் இருந்து இந்தியாவின் குஜராத் துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது)

மூன்று கப்பல்களும் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் கப்பல்களின் சில பகுதிகள் சேதமடைந்தாலும், பணியாளர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா, இஸ்ரேல் கோர தாண்டவம்! ஈரானில் 2,000ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

இந்தத் தாக்குதல், ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னணியில் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ல் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தன. ஒரு மாதத்துக்கு மேல் நீடித்த போருக்குப் பிறகு, கடந்த 8-ம் தேதி இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா சம்மதித்தது. இன்றுடன் அந்தத் தற்காலிக ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், டிரம்ப் அதை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்திருந்தார்.

ஈரான் தரப்பில் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இது சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களும் ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. அப்போது ஈரான் “தவறுதலாக” நடந்தது என்று விளக்கம் அளித்திருந்தது.

மேலும், இரண்டு ஈரான் எண்ணெய் கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பை மீறி, விளக்குகளை அணைத்தபடி இரவு நேரத்தில் ரகசியமாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய பதற்றம், சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு நெருக்கடி!! 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஒரு கப்பலை சுட்டு பிடித்ததாகவும் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share