இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!
சமீபத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல்களில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடிய வகையில், இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தனது நேரடி படைகளுடன், தங்களுக்கு ஆதரவாக செயல்படும் பிராந்திய ஆயுதக் குழுக்களையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
‘ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா, ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஈரான் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இதனுடன் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளும் சாத்தியமான நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் குத்ஸ் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், ஹெஸ்பொல்லா உள்ளிட்ட ஆதரவு அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த சந்திப்புகளின் மூலம் கூட்டு நடவடிக்கைக்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது! டிரம்பின் அதிரடி அறிவிப்பால் ஈரானுக்கு புதிய நெருக்கடி?
சமீபத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல்களில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஈரான் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் உண்மையில் இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த பெரிய தாக்குதலுக்கான தயாரிப்புகளா அல்லது பிராந்திய அளவிலான ராணுவ திறனை அதிகரிக்கும் முயற்சிகளா என்பது தற்போது தெளிவாகவில்லை. குறிப்பாக, ஈரான் ஆதரவு அமைப்புகள் பல்வேறு நாடுகளில் தனித்தனி சூழ்நிலைகளில் செயல்பட்டு வருவதால், அவற்றை ஒரே கட்டளையின் கீழ் ஒருங்கிணைப்பது நடைமுறையில் சிக்கலானதாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும், ஈரான் தனது ஆதரவு வலையமைப்புடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவல்கள், ஏற்கனவே பதற்றத்தில் உள்ள மேற்காசிய நிலவரத்தை மேலும் கவலைக்குரியதாக மாற்றியுள்ளன. இந்த தகவல்கள் தொடர்பாக ஈரான் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகும் வரை, தாக்குதல் திட்டம் குறித்த தகவலை உறுதியான முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க: ஈரான் என்ற நாடே மிஞ்சாது! அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும்? டிரம்ப் விடுத்த பயங்கர வார்னிங்!