×
 

இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

கமேனியின் படுகொலைக்கு பழி வாங்க, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உள்பட கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலை ஈரான் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானைச் சேர்ந்த பழமைவாத நாளிதழ் ஒன்று வெளியிட்ட தகவல் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க வேண்டிய நபர்கள் என்ற தலைப்பில் 13 வெளிநாட்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்ததாகவும், அதன்பிறகு அவரது மகனும் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி பழிவாங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்று அறிவித்திருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், போர் நிறுத்த முயற்சிகள் நடைபெற்றாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில், டெஹ்ரான் நகராட்சி நிர்வாகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஹம்ஷஹ்ரி (Hamshahri) நாளிதழ் தனது இணைய தளத்தில் 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்களுடன் ஒரு தகவல் விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் ஜலசந்தி! ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி! போர் பதற்றம்!

அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், இந்தப் பட்டியலை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததாக எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. மொஜ்தபா கமேனி தனது அறிக்கையில் பழிவாங்கப்பட வேண்டிய நபர்களின் பட்டியல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும், எந்த பெயர்களையும் நேரடியாக வெளியிடவில்லை என்றும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹம்ஷஹ்ரி நாளிதழ் வெளியிட்ட பட்டியல் அதிகாரப்பூர்வ அரசுப் பட்டியல் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

இதையும் படிங்க: 1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share