ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி நிலை கவலைக்கிடம்? எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்? பரபரப்பு தகவல்!
இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரான் அதிபர் பெசெஷ்கியன், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக கூறியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து ஈரானின் உயர்மட்ட வட்டாரங்களில் கவலை நிலவுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமெனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றதாக கூறப்படும் மொஜ்தபா கமெனி இதுவரை பொதுவெளியில் நேரடியாக தோன்றவில்லை. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்ததாகவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையும் படிங்க: சவுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது! பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை!
இதற்கிடையே, மொஜ்தபா கமெனி பெயரில் பல்வேறு அறிக்கைகள் வெளியாகின. அந்த அறிக்கைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இந்த சூழலில், இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14, மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கக்கூடும் என்ற தகவல்கள் ஈரானின் உயர்மட்ட தலைமை வட்டாரங்களில் பரவி வருவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மொஜ்தபா கமெனி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமானதாக கூறப்படும் ஒரு வட்டாரம், மொஜ்தபா கமெனி விரைவில் உயிரிழந்ததாக தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரான் அதிபர் பெசெஷ்கியன், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக கூறியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மொஜ்தபா கமெனியின் உடல்நிலை குறித்த இஸ்ரேலிய ஊடகத்தின் தகவலை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததாக தகவல் இல்லை. எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல்களை உறுதி செய்யப்படாத செய்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவரின் உடல்நிலை தொடர்பான தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே போர் பதற்றத்தில் உள்ள மேற்காசியாவில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!