×
 

நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

வெள்ள அபாய எச்சரிக்கை வந்தபோது கடையில் இருந்ததாக கூறும் பிரகாஷ், உடனடியாக வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை வெளியேற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வெள்ளம் வீட்டை சூழ்ந்ததால், குடும்பத்தினர் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல மாடி கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 4 மாடி பச்சை நிற வீடு மட்டும் சேதமின்றி உறுதியாக நின்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

திபெத் எல்லையை ஒட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து போட்டேகோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்பாராத வேகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம், ஆற்றங்கரையோர பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றது. இந்த பேரழிவுக்கு மத்தியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 40 ஆண்டு பழமையான பச்சை நிற 4 மாடி வீடு மட்டும் பெரிய அளவில் சேதமடையாமல் தப்பியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இதையும் படிங்க: நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட 5 உடல்கள்! கண்டக் ஆற்றில் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி! இந்திய எல்லையில் சோகக் காட்சி!

வெள்ள அபாய எச்சரிக்கை வந்தபோது கடையில் இருந்ததாக கூறும் பிரகாஷ், உடனடியாக வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை வெளியேற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வெள்ளம் வீட்டை சூழ்ந்ததால், குடும்பத்தினர் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கும் தண்ணீர் வரத் தொடங்கியதால் அனைவரும் மேற்கூரைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது பள்ளிக்கு சென்றிருந்த தனது மகனை நினைத்து மிகவும் அஞ்சியதாகவும் அவர் கூறியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் சிறப்பாக இருந்ததாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆற்றை ஒட்டிய பகுதி என்பதால் வீட்டின் அடித்தளம் மற்றும் தரைமட்டம் கூடுதல் கவனத்துடன் வலுவாக அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளத்தில் தரைத்தள பொருட்கள் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

சில மணி நேரங்களில் வெள்ளநீர் குறையத் தொடங்கியபோது, மீட்புப் பணியாளர்கள் கயிறு மற்றும் குழாய்களின் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டுள்ளனர். தற்போது அனைவரும் காத்மாண்டுவில் பாதுகாப்பாக இருப்பதாகவும், மீண்டும் தங்களது வீட்டிலிருந்தே வாழ்க்கையை தொடங்கப் போவதாகவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி லஷ்மி பாண்டே கூறுகையில், நிலைமை கட்டுப்பாட்டை மீறியபோது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கடவுளை வேண்டியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தையும் ஹனுமன் சலீசாவையும் பாடியதாகவும், தாங்கள் உயிர் தப்பியது இரண்டாவது பிறப்பு போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நேபாளத்தில் ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் தங்கள் வீடு கடுமையான அதிர்வை சந்தித்ததாகவும், அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்த நிலையில் அப்போது அக்கம்பக்கத்தினர் உதவியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். தற்போது பெருவெள்ளத்திலும் வீடு உறுதியாக நின்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? அறிக்கை கொடுங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share