நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கல்வி மேம்பாட்டு அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
காத்மாண்டு: நேபாளத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளத்தில் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பனிப்பாறை சரிவு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செப்டம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, இந்த பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,798 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய நேபாளத்தின் ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. கல்வி மேம்பாட்டு அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் வெள்ளத்துக்குப் பிறகு வரும் பேராபத்து? காலரா, தட்டம்மை அச்சம்! பீதியில் உறைந்த மக்கள்!
ராசுவா மாவட்டத்தில் மட்டும் 290 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 குழந்தைகள் வரை மாயமாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இரு மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 600 குழந்தைகளின் நிலை குறித்து தற்போது தகவல் இல்லை.
நுவாகோட் கல்வி மேம்பாட்டு ஒருங்கிணைப்பு பிரிவு தலைவர் சூர்யா பகதூர் கத்ரி கூறுகையில், காணாமல் போன மாணவர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், வெள்ளத்தால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் துல்லியமான விவரங்களை உடனடியாக பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்வேறு பள்ளிகளில் இருந்து புதிய தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், நுவாகோட் மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 மாணவர்கள் காணாமல் போயிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். ராசுவா மாவட்டத்தில் 16 ஆசிரியர்களை காணவில்லை. இவர்களில் 15 பேர் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றும், ஒருவர் தனியார் பள்ளி ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் மாவட்டங்களில் 22 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 12 பள்ளிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக நேபாள கல்வி அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!