உடைந்தது திபெத் அணை! மீட்புப் பணியை நிறுத்துங்க! பாதுகாப்பான இடத்துக்கு போங்க! நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!
சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்மாண்டு: நேபாளத்தை ஏற்கனவே உலுக்கிய பெருவெள்ளத்தின் பாதிப்புகள் முழுமையாக விலகாத நிலையில், திபெத் பகுதியில் தடுப்பாக உருவான நீர்நிலை உடைந்ததாக தகவல் கிடைத்துள்ளதால், அந்நாட்டில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் உள்ள போதே கோஷி ஆற்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தின் வேகத்தில் பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. ரசுவா உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளத்தால் காணாமல் போனவர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புதிய வெள்ள அபாயம் உருவாகியிருப்பது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து? இன்னும் 72 மணி நேரம்தான்! சீனா வெளியிட்ட பகீர் எச்சரிக்கை!
முன்னதாக, திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஆற்றில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக புதிய தடுப்பு ஏரி உருவாகியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த ஏரியில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால், அது உடைந்து கீழ்நோக்கி வெள்ளம் பாயும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகளும் நேபாள அதிகாரிகளும் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், திபெத் பகுதியில் உள்ள நீர்த்தடுப்பு மீண்டும் உடைந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக நேபாள போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். இதனால் போதே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஆபத்து தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை சந்தித்துள்ள நேபாளத்தில், புதிய வெள்ள அபாய எச்சரிக்கை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் ஆற்றின் நீர்மட்டம் மற்றும் திபெத் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நிம்மதி செய்தி! நேபாளத்தில் சிக்கிய 20 தமிழர்கள் பத்திரமாக மீட்பு! பெயர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்!