“சரியான நேரத்தில் வெனிசுலா அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்” மரியா கொரினா மச்சாடோ அதிரடி!
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
கராகஸ்: வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், 2025 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ பெரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட நோபல் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு நேற்று ஒப்படைத்த சில மணி நேரங்களிலேயே, “சரியான நேரத்தில் நான் வெனிசுலாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மரியா கொரினா மச்சாடோ கூறியதாவது: “எனக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு உள்ளது. வெனிசுலாவை மாற்றுவதாக சபதம் செய்துள்ளேன். நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நம்புகிறேன். சரியான நேரத்தில் நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன். ஒரு தெளிவான குறிக்கோள் உள்ளது – வெனிசுலாவை சிறந்த நாடாக மாற்றுவது. நான் மிகவும் பயனுள்ள இடத்தில் இருந்து சேவை செய்ய விரும்புகிறேன். வெனிசுலா மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.”
அவர் மேலும் கூறினார்: “நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சி முடிந்த பிறகு, அமெரிக்கா டெல்சி ரோட்ரிகஸை ஆதரித்தாலும், ஒருநாள் நான் தான் வெனிசுலாவை வழிநடத்துவேன்.”
இதையும் படிங்க: கிரீன்லாந்தை கைப்பற்றுவதை எதிர்ப்பவர்களுக்கு வரி விதிப்பேன்.. அமெரிக்காவின் ஆர்க்டிக் கனவு! டிரம்பின் அதிரடி மிரட்டல்!
நேற்று மரியா கொரினா தனது நோபல் பதக்கத்தை டிரம்பிடம் ஒப்படைத்தார். டிரம்ப் அதை ஏற்றுக்கொண்டாலும், நோபல் குழு உடனடியாக விளக்கம் அளித்தது – “பதக்கம் யாருக்குக் கொடுக்கப்பட்டாலும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் என்ற வரலாற்று பதிவு என்றென்றும் மரியா கொரினா மச்சாடோவுக்கே சொந்தமானது. பரிசை ரத்து செய்யவோ மாற்றவோ முடியாது.”
இந்த நிகழ்வு மற்றும் அதைத் தொடர்ந்து வந்த அவரது அதிபர் ஆசை அறிவிப்பு, வெனிசுலாவில் மதுரோ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. டிரம்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் மச்சாடோவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் அமெரிக்க ஆதரவுடன் வெனிசுலாவில் பெரும் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கார் குண்டு வெடிப்பு!! ஆட்டத்தை சூடேற்றும் அமலாக்கத்துறை! ரூ.139 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!