மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த டெக்சாஸ்.. கலங்கிய மக்களுக்கு ஆறுதல் சொன்ன ட்ரம்ப்..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய டெக்சாஸ் பகுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 4ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கெர்ர் கவுண்டியில் ஏற்பட்ட பெருவெள்ளம், மாநிலத்தின் மத்திய பகுதியை கடுமையாகப் பாதித்தது. இந்த பேரழிவு, குவாடலூப் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டது, இதில் 15 அங்குலம் வரை மழை பெய்து, ஆறு ஒரு மணி நேரத்தில் 26 அடி உயரத்திற்கு உயர்ந்தது.
டெக்சாஸின் மலைப்பகுதியான ஹில் கன்ட்ரியில், குறிப்பாக கெர்ர் கவுண்டியில், வெள்ளம் கடுமையான அழிவை ஏற்படுத்தியது. வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள் மூழ்கின. குறிப்பாக, கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ முகாமில் 700 சிறுமிகள் தங்கியிருந்தபோது, வெள்ளம் அவர்களைத் தாக்கியது. முகாமின் கேபின்களில் ஆறு அடி உயரத்திற்கு மண் நிறைந்து, படுக்கைகள், உடமைகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு கேபினின் சுவர் உடைந்து, பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன.
குவாடலூப் ஆற்றின் கரையோரம் இருந்த வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரழிவு, மாநிலத்தின் மற்ற பகுதிகளான டிராவிஸ், சான் சபா மற்றும் கெண்டல் கவுண்டிகளையும் பாதித்தது. இந்த வெள்ளத்தில் குறைந்தது 129 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 103 பேர் கெர்ர் கவுண்டியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 36 பேர் குழந்தைகள். கேம்ப் மிஸ்டிக்கில் 26 சிறுமிகள் மற்றும் ஒரு ஆலோசகர் உயிரிழந்தனர், மேலும் 10 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 166 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 140 பேர் கெர்ர் கவுண்டியைச் சேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 1300 பேர் டிஸ்மிஸ்! சீட்டை கிழித்த ட்ரம்ப்! சீர்திருத்த நடவடிக்கையால் அல்லோலபடும் அமெரிக்கா!
மீட்புக் குழுக்கள் தேடுதல் பணியை தொடர்கின்றன. முகாமின் இயக்குநர் டிக் ஈஸ்ட்லேண்ட், மாணவிகளைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார், அவரது தியாகம் பலரால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப், கெர்ர் கவுண்டியில் உள்ள கெர்வில்லுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட், செனட்டர்கள் ஜான் கார்னின், டெட் க்ரூஸ் மற்றும் முதல் பெண்மணி ஆகியோருடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். கெர்வில்லில் நடந்த உரையாடல் கூட்டத்தில், ட்ரம்ப் இந்த பேரழிவை "100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர்" என்று கூறினார்.
முதல் பெண்மணி மெலனியா, இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் மாணவிகளிடமிருந்து வளையல் பெற்றதாகக் கூறினார். ட்ரம்ப், முதல் மீட்பாளர்களையும், உள்ளூர் அதிகாரிகளையும் பாராட்டினார். நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: NASA உயரதிகாரிகளுக்கு ஆப்பு! 2000 பேர் சீட்டு கிழிஞ்சது..! செலவை குறைக்க ட்ரம்ப் திட்டம்!