தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!
ஈரான் போரில் ஈடுபட்டிருந்த 8 ஏவுகணைகளுடன் கூடிய 2 அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அனுமதி மறுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு வழங்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த முக்கியத் தகவலை அவர் வெளியிட்டார். கடந்த மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில், ஜிபூட்டி (Djibouti) தளத்திலிருந்து வந்த தலா 8 கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்ட 2 அமெரிக்கப் போர் விமானங்களைத் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான இந்த விண்ணப்பத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு செய்து, இறுதியில் அதை நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலவி வரும் கடும் புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை எக்காலத்திலும் தனது நடுநிலைப்பாட்டிலிருந்து விலகாது. எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக எங்களது வான்வெளியையோ அல்லது நிலப்பரப்பையோ பயன்படுத்த அனுமதிக்க முடியாது, என அதிபர் திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மஹால் படத்துடன் விளம்பரம்!
சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானியப் போர் கப்பலான 'IRIS Dena' அமெரிக்காவால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. அதேபோல், ஈரானின் 3 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வரக் கோரிய விண்ணப்பத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு வல்லரசு பக்கமும் சாயாமல் 'அனைவருக்கும் நண்பன், எவருக்கும் எதிரி அல்ல' என்ற வெளியுறவுக் கொள்கையை இலங்கை வலுவாகப் பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இந்தத் துணிச்சலான முடிவு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!