×
 

Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

அமெரிக்கா-ஈரான் இடையே 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில் பேச்சுவார்த்தைகளில் நான் மகிழ்ச்சி அடையவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

ஜெனீவாவில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான 3-வது சுற்று அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் டிரம்ப், பேச்சுவார்த்தைகள் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

பிப்ரவரி 27 அன்று வெள்ளை மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் நமக்கு தேவையானதை கொடுக்க தயாராக இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார். 

மேலும், "மத்திய கிழக்கில் மற்றொரு போரை தவிர்க்க ஈரானுக்கு போதுமான நேரம் கொடுக்கிறேன். ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் சில சமயங்களில் கட்டாயம் ஏற்படலாம். அவர்களின் பேச்சுவார்த்தை முறையில் நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது" என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.

இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம்! பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்! ஈரான் - அமெரிக்கா பேச்சு! சமரச தீர்வா? போரா?

கடந்த பிப்ரவரி 26 அன்று ஜெனீவாவில் நடந்த 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி மத்தியஸ்தம் செய்தார். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக ஓமன் தரப்பு கூறினாலும், உடன்பாடு எட்டப்படவில்லை. 

அமெரிக்கா ஈரானின் அணு வசதிகளை அழிக்க வேண்டும், உயர் செறிவு யுரேனியத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும், நிரந்தர ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. ஈரான் சிறிய அளவு அணு செறிவாக்கத்தை மருத்துவ நோக்கத்துக்காக அனுமதிக்கலாம் என்பதை ஏற்கலாம் என்றாலும், முழு அழிப்பு மற்றும் யுரேனியம் அனுப்புதலை ஏற்க மறுத்துள்ளது.

இதற்கிடையே மத்திய கிழக்கில் அமெரிக்கா போர் கப்பல்கள், விமானங்கள், ராணுவ வீரர்களை அதிகரித்து வருகிறது. ஈரானுக்கு அருகே பெரும் ராணுவ திரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போர் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்கா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களுக்கு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினாலும், ஈரான் ஒப்பந்தம் ஏற்காவிட்டால் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாததாக மாறலாம் என எச்சரித்துள்ளார். இது மத்திய கிழக்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு பயம்காட்டும் அமெரிக்கா! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிப்பு!! ட்ர்ம்ப் அட்ராசிட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share