அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!
''அணுசக்தி திட்ட ஒப்பந்தமின்றி போரை முடிவுக்கு கொண்டு வரும் ஈரானின் முன்மொழிவுக்கு வாய்ப்பில்லை,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேற்காசியப் பதற்றம் தொடர்கிறது. அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்கும் ஈரானின் முன்மொழிவுக்கு அமெரிக்கா கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “அணுசக்தி திட்ட ஒப்பந்தம் இன்றி போரை முடிவுக்கு கொண்டு வரும் ஈரானின் முன்மொழிவுக்கு வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இரண்டாம் கட்ட பேச்சு ரத்தான நிலையில், பாகிஸ்தான் வாயிலாக ஈரான் 10 அம்ச முன்மொழிவை அமெரிக்காவுக்கு அனுப்பியது.
இதையும் படிங்க: சரக்கு கப்பல்களை தாக்கிய ஈரான்!! 3 கப்பல்கள் நாசம்! ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு!
இந்த முன்மொழிவில், அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகையை விலக்கினால், போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்ற ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்க மறுத்தது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “நேர்மையற்ற பேச்சு” என்று கண்டித்தார்.
மார்கோ ரூபியோ கூறுகையில், “ஈரானியர்கள் கால அவகாசம் பெற விரும்பும் திறமையான பேச்சாளர்கள். அணுசக்தி விவகாரமே இந்த மோதலின் மையம். அதை விவாதிக்காமல் எந்த ஒப்பந்தமும் சாத்தியமில்லை. தீவிர மதவாத ஆட்சி தொடரும் வரை ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதம் வேண்டும் என்று முடிவெடுக்கும்” என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, அமெரிக்க கடற்படை முற்றுகை காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், சேமிப்பு கிடங்குகள் நிரம்பியதால், அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை 12 முதல் 22 நாட்களுக்குள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 4,089 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியை நிறுத்தினால் எண்ணெய் கிணறுகள் சேதமடையும் அபாயமும் உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர், “இனி மற்ற நாடுகளுக்கு கட்டளையிடும் நிலையில் அமெரிக்கா இல்லை. சட்டவிரோத நிபந்தனைகளை விதிப்பதை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார். ஈரான் தன் தற்காப்பு திறன்களை பிற நாடுகளுடன் பகிர தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இரு தரப்பும் பிடிவாதம் காட்டுவதால், மோதல் இன்னும் சில காலம் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. உலக எண்ணெய் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!