உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு மற்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை முற்றிலும் தடுக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களின் இயக்கத்திலும் ஈரான் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், ஈரான் விதித்துள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானிடம் பணமில்லை, படை வலிமையில்லை? அதிபர் டிரம்பின் அதிரடி குற்றச்சாட்டு!
இந்த விதிகளை மீறி பயணிக்கும் சரக்கு கப்பல்களுக்கு எதிர்கால பயணங்களில் அபராதம் விதிக்கப்படலாம் என்றும், தேவையான சூழ்நிலையில் கப்பல்கள் சிறைபிடிக்கப்படலாம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்கனவே பதற்றமான கடல் வழித்தடத்தில் கப்பல் நிறுவனங்களின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் வெளியிட்டதாக கூறப்படும் எச்சரிக்கை சர்வதேச சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பிற நாடுகள் ஆதரவு அளித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் கணிசமான அளவு கடல் வழி எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதால், அந்த பாதையில் ஏற்படும் எந்தவொரு பெரிய தடையும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள ஆசிய நாடுகளுக்கு இது முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வந்தால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோகச் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையிலும் மறைமுக தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் மூடப்பட்டாலும் எண்ணெய் தட்டுப்பாடு வராது!! அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் அதிரடி!