செல்வப்பெருந்தகை தவறான தகவல் பரப்பிய விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
கடந்த 20ம் தேதி அன்று, சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதை தடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், தேர்தல் பரப்புரையை முடக்க நினைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டினார்.
அரசியல் வட்டாரத்தில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் வெளியானது. செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் கொடுத்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தக்கூடாது எனும் விதி உள்ளது என்றும், நம்பகத் தன்மையான, உறுதியான தகவல் என்றால் மட்டுமே சோதனை நடத்தப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு 1996 நிலைதான் ஏற்படும்! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி கணிப்பு!
இதனிடையே, பொய்யான தகவல்கள் பரப்பி அரசுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக, செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. செல்வப்பெருந்தகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், சமீப காலத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அவரது இல்லம் உள்ளிட்ட எந்த இடங்களிலும் சோதனை நடைபெறவில்லை என்றும், அவரது நகர்வுக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல் பரப்பிய விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!