சென்னை: சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் கனிமொழி எம்.பி.,யை மாநில அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலர் துரைமுருகன் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியடைந்த நிலையில், கட்சியை பலப்படுத்த புதிய உத்திகள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், “கனிமொழி எம்.பி., மாநில அரசியலுக்கு வந்து கட்சி வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி கதிரவன், ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், “கனிமொழியை மாநில அரசியலில் ஈடுபடுத்தி முக்கிய பொறுப்பு வழங்கினால் பெண்கள் ஓட்டுகளை அதிகம் கவர முடியும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழலில் தி.மு.க., மகளிர் அணி முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சென்னை ஆர்.ஏ.புரத்தில் கனிமொழி எம்.பி., தலைமையில் தேர்தல் பணியில் உழைத்த பெண்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. வரும் 13ஆம் தேதி அறிவாலயத்தில் தேர்தல் தோல்வி குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இதில் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகையில், “தோல்வியில் இருந்து பாடம் கற்று, மகளிர் அணியை வலுப்படுத்தவும், தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றவும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கனிமொழியை மாநில அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியாகவும் இதைப் பார்க்கிறோம்” என்றனர்.
தேர்தலில் பெண்கள் பெரும் அளவில் உழைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் மகளிர் அணியின் நம்பிக்கையை உயர்த்தவும், கனிமொழியின் தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தோல்விக்குப் பிறகு கட்சியில் புதிய பொறுப்புகள் மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த முயற்சிகள் தி.மு.க.,வுக்கு புதிய ஆற்றலை அளிக்குமா என்பதை அடுத்தக்கட்ட நிகழ்வுகள் தீர்மானிக்கும். கட்சியின் எதிர்கால திசைவழியில் கனிமொழியின் பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து இன்னும் கடினமாக உழைப்பேன்!! மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் திடீர் அறிக்கை!