அமலாக்கத்துறை (ED) அதிகாரியாக பணியாற்றிய கபில் ராஜ், இரு முதல்வர்களான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர். உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் துணை இயக்குநராகவும், ராஞ்சி மண்டல இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் 2009ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். பி.டெக் பட்டதாரியான கபில், ரூ.13,000 கோடி மதிப்புள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிரான விசாரணைகளையும் முன்னின்று நடத்தியுள்ளார். இவரது திறமையான பணி, கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவுகள் தயாரித்தல் உள்ளிட்டவற்றால் பரவலாகப் பேசப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.17000 கோடி கடன் மோசடி.. வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம்.. அனில் அம்பானியை நெருங்கும் ED!!
இதனிடையே அமலாக்கத்துறை (இடி) அதிகாரியான கபில் ராஜ், 16 ஆண்டு பணிக்காலத்திற்குப் பிறகு, தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 17ம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்து, தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றார்.
இந்நிலையில், 45 வயதான கபில் ராஜ் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார். ரிலையன்ஸில் கபில் ராஜின் புதிய பொறுப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது நிதி விசாரணை மற்றும் ஒழுங்குமுறை அனுபவம், ரிலையன்ஸின் மூலோபாய வளர்ச்சிக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, முன்னாள் சிபிடி தலைவர் கே.வி. சவுத்ரி மற்றும் வரி ஆலோசகர் தினேஷ் கனபர் ஆகியோரும் ரிலையன்ஸில் இணைந்துள்ளனர். இந்த நியமனம், அரசு அதிகாரிகள் தனியார் துறைக்கு மாறுவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை நடத்தியதற்கு இது ஒரு "வெகுமதி" என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மாற்றம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கவினை கொலை செய்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்! கண்ணீர் விட்டு கதறிய சுர்ஜித்...