கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் தனியார் சொகுசு படுக்கை வசதி பேருந்து ஒன்று முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பெங்களூருவில் இருந்து உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கோகர்ணா நோக்கி சென்று கொண்டிருந்த சீபர்ட் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலூக்காவில் உள்ள கோர்லத்து கிராஸ் அருகே ராஷ்ட்ரிய நெடுஞ்சாலை 48-ல் சென்ற போது எதிர்த்திசையில் வந்த கன்டெய்னர் லாரி டிவைடரைத் தாண்டி வந்து பேருந்தின் மீது மோதியது.
இந்த கோர மோதலால் பேருந்தில் உடனடியாக தீ பரவியது. பேருந்து முழுவதும் சில நிமிடங்களில் தீயில் சிக்கி முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் குறைந்தது 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் கோகர்ணா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் நிகழ்ந்த இந்த கோர விபத்து கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நிகழ்ந்துள்ள இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த ட்ரெஸ்லாம் போடவே கூடாது..!! கர்நாடக அரசு ஊழியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!
இந்த சம்பவம் மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாதவிடாய் விடுப்புக்கு இடைக்கால தடை..?? கொஞ்ச நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..!! கர்நாடக ஐகோர்ட் அதிரடி..!!