ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவும் நிலையில், ஸ்ரீநகர் போலீசார் பெரிய பயங்கரவாத தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். தல்கேட் பகுதியில் ஆயுதங்கள் ஏந்திய மூன்று சந்தேக நபர்களை கைது செய்து, பெரும் சதித்திட்டத்தை தடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத குழுக்களின் பதிலடி திட்டங்களுக்கு எதிரான முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.
நினைவுகூர்ந்தால், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற துணிச்சல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, அவர்களின் ராணுவ விமான தளங்களும் பெரும் சேதத்தை சந்தித்தன.
இந்த அடி, பாகிஸ்தானை அதிரச் செய்தது. ஆனால், இப்போது உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது – லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகள், இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய சதிகளை தீட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரில் சிதைக்கப்பட்ட பாக்.,! இந்தியாவை பழிதீர்க்க பயங்கரவாதிகள் சதித்திட்டம்! உளவுத்துறை பகீர்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த உயர் மட்ட கூட்டம் இதற்கான சான்ற. ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதன் விளைவாக, லஷ்கர்-இ-தொய்பா தங்கள் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நிதி திரட்டத் தொடங்கியுள்ளது. வழக்கம்போல் குளிர்காலத்தில் எல்லை ஊடுருவல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்முறை அவர்கள் தாக்குதல்களை அதிகரிக்க ஊடுருவல்களை திட்டமிட்டுள்ளனர். இதனால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷாராக உள்ளனர்.
இந்த சூழலில் வந்தது ஸ்ரீநகர் போலீசின் வெற்றி. தல்கேட் அருகே உள்ள கோனகான், டால்கேட் பகுதியில் வழக்கமான வாகன சோதனையின் போது, ஒரு கருப்பு ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்போது, ஓட்டுநர் மற்றும் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த இருவர் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால், போலீசாரின் விரைவான செயல்பாட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கூலிபோரா கன்யாரைச் சேர்ந்த ஷா முதாயிப், கம்ரான் ஹசன் ஷா ஆகியோர் மற்றும் உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த முகமது நதீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைது, பெரிய தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம், காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் உஷார்மனப்பான்மையை காட்டுகிறது. பயங்கரவாதிகளின் சதிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களின் திட்டங்கள் தடுக்கப்படுவதே உண்மையான வெற்றி. காஷ்மீரின் அமைதிக்காக ராணுவமும், போலீசும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த வெற்றி, மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. எதிர்காலத்தில் இத்தகைய சதிகள் எல்லாம் முறியடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: இரண்டு பக்கமும் போர்!! நெருக்கடியில் பாக்., எங்களை சிக்க வைக்க பார்க்கிறது இந்தியா! புலம்பும் கவாஜா!