திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
ஆனால் ஆளுநர் உரையை வாசிக்கும் போது சில முக்கிய பகுதிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசு தயாரித்து கொடுத்த 72 மக்களைக் கொண்ட கொள்கை உரையில் 157 பத்திகள் இருந்தன. ஆளுநர் உரையை வாசிக்கும் போது 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை, 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை என்றும், 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார் என்றும் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு!! எங்க கூட்டணி வாய்ப்பை தடுக்குறாங்க! பினராயி விஜயன் புலம்பல்!!
மிக முக்கியமாக, மத்திய அரசு நிதி வழங்காதது, மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்தது போன்ற மத்திய அரசுக்கு எதிரான விமர்சன பகுதிகளை ஆளுநர் வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
“ஆளுநர் உரை அரசின் கொள்கை அறிக்கை. அதை முழுமையாக வாசிக்காமல் தவிர்ப்பது அரசியல் நோக்கம் கொண்ட செயல்” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இது கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநர்கள் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்ப்பது அல்லது மாற்றி வாசிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், மாநில அரசுகள் – ஆளுநர்கள் இடையேயான மோதல் மீண்டும் வெடித்துள்ளது. கேரள சட்டசபையில் இன்று ஏற்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆளுநர் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய – மாநில உறவுகளில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சாதி, மதம் பள்ளிகளில் கூடாது! பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!