கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள கருமத்துார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப் (44) தனது இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முயன்றபோது, முதல் மனைவியின் சம்மதம் இன்றி அது சாத்தியமில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தை அரசியலமைப்பு உரிமைகளுக்கு அடிப்படையாக வைத்து விளக்கியுள்ளது.
"மதம் இரண்டாம் இடம் பட்சம் தான். அரசியலமைப்பு உரிமைகள் தான் முதலில்" என்று நீதிபதி பி.வி. குஞ்சுகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். இது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தும் படியாகவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்த வழக்கின் தொடக்கம் 2017-ல் நடந்தது. காசர்கோடு சேர்ந்த ஆபிதா (38) என்பவரை ஷெரீப் இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால், அவரது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால், திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலர் இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தார். இதை எதிர்த்து ஷெரீப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தின்படி, ஒரு ஆண் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்யலாம். எனவே எனது திருமணத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று அவர் வாதிட்டார். ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா தெரியலையா? சிதைந்து பள்ளிகளை சீரமைக்க சீமான் வலியுறுத்தல்...!
நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் தனது தீர்ப்பில் (அக்டோபர் 30) கூறியது: "அரசியலமைப்பு சட்டம் இருபாலினருக்கும் சம உரிமை அளிக்கிறது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் இல்லை. முதல் திருமணம் இன்னும் செல்லுபடியாக இருக்கும்போது, 99.99 சதவீத முஸ்லிம் பெண்கள் இரண்டாவது திருமணத்தை ஏற்க மாட்டார்கள்.
" திருமணப் பதிவு விண்ணப்பத்தில் வேறு மனைவி இருந்தால் அவரது விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றும், முஸ்லிம் சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்றாலும், அதைப் பதிவு செய்ய முதல் மனைவியின் சம்மதம் அல்லது குறைந்தபட்சம் அறிவிப்பு அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

"குர்ஆன் அல்லது முஸ்லிம் சட்டம், முதல் மனைவியின் அறிவின்றி இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கவில்லை. இது வெளிப்படையான திருமானம் அல்ல, மறைமுக உறவாக மாறிவிடும்" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருமணப் பதிவு செயலர் முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்க வேண்டும். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், பதிவு செய்யக்கூடாது. அது செல்லுபடியில்லை என்றால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
"முஸ்லிம் ஆண் இரண்டாவது திருமணம் செய்யலாம், ஆனால் பதிவு செய்யும்போது நாட்டின் சட்டம் மேலானது. முதல் மனைவி அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க முடியாது" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஷெரீப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி, முதல் மனைவியின் கருத்தை கேட்ட பிறகு திருமணம் பதிவு செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் சிலர் "பெண்கள் உரிமைகளுக்கு வலுவான படி" என்று வரவளைத்துள்ளனர். மற்றொரு தரப்பு, "மத சட்டங்களை அரசியலமைப்பு மீறக் கூடாது" என்று விமர்சித்துள்ளனர்.
கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே செப்டம்பரில், "முஸ்லிம் ஆண் இரண்டாவது மனைவியை பராமரிக்கும் திறன் இன்றி திருமணம் செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புகள், யூனிஃபார்ம் சிவில் கோட் (UCC) விவாதத்தை மீண்டும் கொந்தளிக்கின்றன. முஸ்லிம் பெண்கள் அமைப்புகள், "இது நமது உரிமைகளை பாதுகாக்கும் முதல் படி" என்று பாராட்டியுள்ளன. கேரளாவின் இந்தத் தீர்ப்பு, மற்ற மாநிலங்களிலும் திருமணப் பதிவு விதிகளுக்கு வழிகாட்டியாகலாம்.
இதையும் படிங்க: மூளையை தின்னும் அமீபா கோரம்! கதி கலங்கும் கேரளா! 5 நாளில் 4 பேர் பலி!