திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ ஒன்று உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு சென்ற ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு சென்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது.
இதையும் படிங்க: மா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு.. கடுமையாக சாடிய எல். முருகன்..!
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாச்சாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி கூறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

நடிகை மீனா சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, அவரது அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
முன்னதாக, மீனா மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது, அவரது அரசியல் ஆர்வம் குறித்த விவாதங்களைத் தூண்டியிருந்தது. இருப்பினும், மீனா இதுவரை பாஜகவில் இணைவது குறித்து எந்த உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானை, எல்.முருகன் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!