பிள்ளைகளை ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் வளர்க்க வேண்டிய புனிதமான பொறுப்பை ஒரு தாய் கைவிடுவது, ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணவனை பிரிந்து, 14 வயதான தனது மகளுடன் வசித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (name changed) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.
2017ஆம் ஆண்டு அந்த சிறுமியை சுப்புராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாகத் தாயிடம் சிறுமி புகார் தெரிவித்தபோது, வெளியில் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன் என தாயும் மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: "பார்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது!" – ஐகோர்ட் அதிரடி!
இதன்பின்னரும் தொடர்ந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில், தாயை பிரிந்து தந்தையிட்ம சென்று முறையிட்டுள்ளார். பின்னர் சிறுமி அளித்த புகாரில், தாய் மீதும், அவரது காதலர் சுப்புராஜ் மீதும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கும், சுப்புராஜுக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2020ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளது என்றும், ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று கூறி, மேல்முறையீடு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், நமது கலாச்சாரத்தில், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியோருக்கு மேலாக, தாய் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு தாயின் முக்கிய கடமை, குழந்தைகளைப் பாதுகாப்புடன், ஒழுக்கத்துடன் வளர்ப்பது என்றும், புனிதமான இந்தக் கடமையைக் கைவிட்டு விட்டால், அது குடும்பம் மற்றும் சமுகத்தின் அடித்தளத்தை வீழ்த்திவிடும் என்றும் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!