மதுரை மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது. இதனையடுத்து திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன் வசந்த் என்பவரின் மனைவி இந்திராணி மேயராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பொன் வசந்த், மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக பணியிட மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அவர் கை ஓங்கி இருந்ததாக கூறப்பட்டது.
அப்போது தான் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது. மதுரையில் 370 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலாகும் என கணக்கிடப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்தியதால் கூடுதலாக 250 கோடி கிடைக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தொகை கிடைக்கவில்லை. இந்த பிண்ணனியில், ரூ.150 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 2,3,4 5 ஆகிய மண்டலங்களில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைக்கப்பட்டு, அதன் மூலம் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே முறைகேடு விவகாரத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். அதற்கு முன்னதாகவே மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஏற்கனவே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் பொன்வசந்திற்கு முக்கிய பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபா... அப்பதான் விஜய் மேல செருப்பு வீசுனாங்க... நயினார் ஓபன் டாக்..!
தற்போது உடல்நிலை காரணமாக பொன் வசந்த் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா ஆணையர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. இதற்காக நாளை மதுரை துணை மேயர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் இந்திராணியின் கடிதம் ஏற்கப்படலாம் என்றும், அதனைத் தொடர்ந்து புதிய மேயர் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கைகளில் கருப்பு பட்டை... திமுக அரசுக்கு எதிர்ப்பு! சட்டப்பேரவைக்குள் ENTRY கொடுத்த அதிமுக உறுப்பினர்கள்...!