2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடரும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரிய ஏமாற்றம் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தலைமையிலான இக்கட்சியின் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவீத வாக்குகளை பெற்றது. ஒரு தொகுதியில் இரண்டாம் இடமும், 25 தொகுதிகளில் மூன்றாம் இடமும் பிடித்தது. கமல்ஹாசன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன் பிறகு கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகினர். 2024 லோக்சபா தேர்தலின் போது திடீரென திமுக கூட்டணியில் இணைந்தது. அப்போது தொகுதி கிடைக்கவில்லை, ராஜ்யசபா சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டது. கமல்ஹாசன் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படங்களில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பங்களித்து வருவதால் திமுகவுடன் நல்லுறவு நீடிக்கிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டும், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: இதுக்கு மேல கேக்காதீங்க?! அவ்வளவு தான்! கூடுதல் தொகுதி கேட்கும் கூட்டணி கட்சிகள்! திமுக கறார்!

ஆனால் திமுக தலைமை ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுச் சின்னம் கிடைக்கும். 2021-ல் 234 தொகுதிகளில் போட்டியிட்டு டார்ச் லைட் சின்னத்தை கைப்பற்றிய கட்சி, இப்போது குறைவான தொகுதிகளே கிடைக்கும் சூழலில் சின்னத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
இதனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் மதிமுக, விசிக, தவாக போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. கமல்ஹாசனையும் அதே பாணியில் செயல்பட வைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
இரட்டை இலக்க தொகுதி கோரிக்கை நிறைவேறாதது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்சியின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலையில் உள்ளனர். திமுக கூட்டணியின் வலிமைக்காக கமல்ஹாசன் இதை ஏற்பாரா என்பது இப்போது பெரிய கேள்வியாக உள்ளது. 2026 தேர்தலில் இந்த முடிவு கட்சியின் வாக்கு வங்கியை எப்படி பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!