மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் 31-வது தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை திட்டம் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தெலுங்கானா சார்பில் துணை முதலமைச்சரும், புதுச்சேரி சார்பில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். விஜய்யும் சிவக்குமாரும் அருகருகே அமர்ந்திருந்த காட்சி குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பேசிய சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டினால் வறட்சி காலங்களில் நீரைச் சேமித்து பயன்படுத்த முடியும் என்றும், தற்போது உபரி நீர் கடலில் வீணாகக் கலப்பதாகவும் குறிப்பிட்டார். “இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடும் கர்நாடகாவும் பயனடையும்.

ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீர் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சமநிலை நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை கர்நாடகா நீண்டகாலமாக முன்னெடுத்து வருகிறது. இது பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் உதவும் என்பது கர்நாடக அரசின் வாதம்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்.. கர்நாடகத்தின் அடுத்தகட்ட அதிரடி.. திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தாக்கல்!
தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நீர் பங்கீடு பாதிக்கப்படும், விவசாயத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு. இத்தகைய பின்னணியில், விஜய் முன்னிலையிலேயே சிவக்குமார் இந்த விவகாரத்தை எழுப்பியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகாவின் அணுகுமுறை குறித்து பதிலளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, எல்லைப் பிரச்சினைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. காவிரி மற்றும் மேகதாது போன்ற நீண்டகால மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடரும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!