காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் விவகாரம், தமிழக அரசியல் அரங்கில் தற்பொழுது மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகத் தவறாகத் திரித்துக் கூறி வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. துரை வைகோ அவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாது விவகாரம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து விளக்கங்களை அளித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், எந்தச் சூழ்நிலையிலும் அங்கு அணை கட்டக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளார்கள் என்று துரை வைகோ சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரைப் பொறுத்தவரை மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாகச் சொல்லியுள்ளார். ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விரைவான திட்ட அறிக்கையைச் (Detailed Project Report) சமர்ப்பிக்கலாம் என்று தான் கூறியுள்ளார்களே தவிர, அணை கட்டலாம் எனக் கூறவில்லை. உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டலாம் என ஆணை பிறப்பித்ததைப் போல ஒரு தவறான தகவலை சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார் என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு உள்ளன என்பதைத் தெரிவித்த துரை வைகோ, இதில் மத்திய அரசு உடனடியாகத் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 127 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளக் காலத்தில் தங்களது கட்டுப்பாட்டை மீறி உபரி நீராக வருவதைக் கர்நாடக மாநிலம் தங்களது கணக்கில் சேர்த்துக் கொள்கிறது. மாறாக, பாசன காலத்தில் உரிய நேரத்தில் தண்ணீர் தர அப்பட்டமாக மறுக்கின்றனர். ஒருவேளை மேகதாது அணை கட்டி விட்டால், தமிழகத்திற்கு 50 விழுக்காடு (50%) தண்ணீர் வருவதற்கு கூட வாய்ப்பு இல்லை. இதனால் டெல்டா மாவட்டங்கள் நீர் ஆதாரம் இல்லாமல் அழிந்து, தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்று வேதனையுடன் எச்சரித்தார்.
இதையும் படிங்க: 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!
இந்த விவகாரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் பாதிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கர்நாடக அரசின் இந்த அக்கிரமமான திட்டத்தை மத்திய அரசு தான் முன்னின்று முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அண்மைக்காலமாக முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து எழுந்து வரும் கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த துரை வைகோ, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எந்தக் காரணத்திற்காகப் பிரதமரைச் சந்திக்கச் சென்றார் என்பது குறித்து அரசு தரப்பில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி ஆதாரங்கள் குறித்தே அவர் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளார். முதல் முறையாகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைச் சந்திப்பது என்பது அரசியல் நடைமுறையில் உள்ளது தான் என்பதை முதல்வர் தெளிவாக விளக்கியுள்ளார்" என்று கூறி இந்தச் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!