மத்திய அரசின் அமைச்சரவையில் விரைவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அமைச்சரவையை மறுசீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அண்மையில் மத்திய இணை அமைச்சர்களில் சிலர் கட்சிப் பணிக்காக மாற்றப்பட்டதும், சிலர் பதவியை ராஜினாமா செய்ததும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது. இதனுடன் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அடுத்தடுத்து சந்தித்தது அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தில் அதிகம் பேசப்படும் துறை நிதித்துறையாகும். தற்போது நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும் பிரதமரின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மோடி தலைமையில் மாறும் அமைச்சரவை! தூக்கியடிக்கப்படும் அமைச்சர்கள்! யார்? யார்? சீட்டு கிழிவது கன்பார்ம்?!

அதே நேரத்தில், நிர்மலா சீதாராமனுக்கு வேறு முக்கிய அமைச்சகம் வழங்கப்படலாம் அல்லது கட்சிப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர பெட்ரோலியத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களிலும் மாற்றம் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்ப துறைகளில் அனுபவம் கொண்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதால், அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதி முடிவு வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!