புது டெல்லி: “நீங்கள் பயங்கரவாதி... உங்கள் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன... உடனடியாக கைது செய்யப்படுவீர்கள்!” என்று போலி போலீஸாக நடித்த மோசடி கும்பல், அதிமுக ராஜ்யசபா எம்பி சி.வி.சண்முகத்துக்கு வீடியோ கால் செய்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடே அதிர்ந்து போன இந்த மோசடி முயற்சியைத் துணிச்சலாக எதிர்கொண்ட சண்முகம், டில்லி பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனில் நேரடியாகச் சென்று புகார் அளித்துள்ளார். “இப்போது எம்பி-க்களையே குறி வைக்கும் அளவுக்கு மோசடி கும்பல் தைரியமாக மாறியுள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலைப் பார்லிமென்ட்டுக்கு செல்லும் வழியில் சண்முகத்தின் செல்போனில் அந்நிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர், “நான் மும்பை காவல்துறை அதிகாரி பேசுகிறேன். நீங்கள் பயங்கரவாதி என கண்டுபிடித்து விட்டோம்! உடனே கைது செய்யப்படுவீர்கள்” என்று மிரட்டினார்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்...!! மலை உச்சியில் ஏற்றப்படுமா மகா தீபம்? - திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு...!
பின்னர் அழைப்பு “மூத்த அதிகாரி” ஒருவருக்கு மாற்றப்படுவதாக சொல்லப்பட்டது. அதன் பின் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. அவர் எடுத்த எடுப்பிலேயே “உங்கள் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன. நீங்கள் வீடியோ கால் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்படுகிறீர்கள். பணம் அனுப்பினால் மட்டுமே விடுவிக்கப்படுவீர்கள்” என்று தொடர்ந்து மிரட்டல் வந்தது.
அனுபவமிக்க அரசியல்வாதியான சி.வி.சண்முகம் உடனே இதை மோசடி என்று கண்டறிந்தார். போனைத் துண்டித்துவிட்டு நேராக பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் அளித்தார். புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்: “மோசடி கும்பல் இப்போது எம்பி-க்களையே தைரியமாக குறி வைக்கிறது. இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் ‘டிஜிட்டல் கைது’ மோசடி புயலாக வீசி வருகிறது. போலீஸ், சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் போல போலி ஐடி மற்றும் உடையணிந்து வீடியோ கால் செய்யும் மர்ம நபர்கள், “உங்கள் பெயரில் பண மோசடி வழக்கு உள்ளது. உடனே கைது செய்யப்படுவீர்கள்! பணம் அனுப்பினால் தப்பிக்கலாம்” என்று மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.
குறிப்பாக முதியவர்கள், பெண்கள் இதில் சிக்கி நொடியில் கோடிகளை இழக்கின்றனர். 2025-ல் மட்டும் இதுபோன்ற மோசடியால் ரூ.1,200 கோடிக்கு மேல் பறிபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை சி.வி.சண்முகம் போன்ற உயர்மட்ட அரசியல்வாதியையே குறி வைத்திருப்பது, மோசடி கும்பல் எந்த அளவுக்கு தைரியமாக மாறியுள்ளது என்பதற்கு சாட்சியாக உள்ளது.
டில்லி போலீஸ் இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றி விசாரணை தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலாகி, “எம்பி-யையே விட மாட்டார்களா?” என்று மக்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விடிய விடிய டார்ச்சர்...!! - நெல்லையில் வீட்டிற்கு கூட விடாமல் பெண் பி.எல்.ஓ.,க்களுக்கு நடந்த கொடுமை...!