மகாராஷ்டிராவை புரட்டிப்போட்ட கனமழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்!
மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஹெச்பிசிஎல் எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் வெள்ளம் புகுந்தது. இதில் காஸ் நிரப்பப்பட்ட மற்றும் காலியான சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மகாராஷ்டிரா முழுவதும் கடந்த சில நாட்களாக பேய் மழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள பாதாளகங்கா ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள ஆலையில் வெள்ள நீர் புகுந்ததால் சிலிண்டர்கள் அனைத்தும் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் அடித்து வரும் சிலிண்டர்களை யாரும் தொடவோ அல்லது எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் சிலிண்டர்கள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! அடுத்த 3 நாட்களில் 50 செ.மீ மழை பெய்யும்!! மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! எகிறும் பலி எண்ணிக்கை!
இதேபோல் டெல்லியிலும் தொடர் கனமழை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. மழை நீர் தேங்கும் பகுதிகளில் வாகனங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த மழை பாதிப்புகள் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையம் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகள் காணாத கனமழை! மும்பையை புரட்டிப்போட்ட வானிலை! தத்தளிக்கும் மக்கள்!