×
 

ரெட் அலர்ட்!! அடுத்த 3 நாட்களில் 50 செ.மீ மழை பெய்யும்!! மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! எகிறும் பலி எண்ணிக்கை!

மஹாராஷ்டிரா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக வர்த்தக நகரான மும்பையில் இந்த வார தொடக்கம் முதலே கனமழை கொட்டி வருகிறது

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தகத் தலைநகரான மும்பை கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விக்ரோலி, கட்கோபர் மற்றும் செம்பூர் பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 12 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் வரை மழை கொட்டியதால் தாதர், புரேல், அந்தேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

கனமழையின் தாக்கத்தால் மும்பை புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பயணத்திற்கு முன்பு தங்கள் விமானங்களின் நிலையை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இதையும் படிங்க: சிவசேனாவில் ஆபரேசன் டைகர்!! உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே அணியில் ஐக்கியம்!

மழை காரணமாக பாண்டுப் மேற்கு பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாந்த்ரா மேற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. கனமழைக்கு இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெட் அலர்ட் காரணமாக மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களமிறக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும், அடுத்த மூன்று நாட்களில் சில பகுதிகளில் 50 சென்டிமீட்டர் வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அவசியமில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மழை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அனைத்து துறைகளும் உச்சகட்ட எச்சரிக்கையில் உள்ளன.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share