மாநிலத்தில் குண்டுகளை வைக்க பாஜக திட்டம்! மேற்கு வங்க தேர்தல் களத்தில் மம்தா பகிரங்க குற்றச்சாட்டு!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வைக்க பாஜக திட்டம் என பரப்புரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாநிலத்தில் வன்முறையைத் தூண்டி, தேர்தலைச் சீர்குலைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் பரப்புரையில் முழங்கியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது போன்ற பிம்பத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் கூறினார். மேற்கு வங்கத் தேர்தலையொட்டி, மாநிலத்தின் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வைக்க பாஜக ரகசியத் திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம் மக்களிடையே அச்சத்தைப் பரப்பி, வாக்குகளைத் திருட அவர்கள் முயற்சிக்கிறார்கள் எனச் சாடினார்.
வெடிகுண்டு சம்பவங்களைச் சாக்காக வைத்து மத்தியப் புலனாய்வு அமைப்புகளை உள்ளே கொண்டு வர பாஜக துடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். திட்டமிட்டு குண்டுகளை வெடிக்க வைத்து, அந்தப் பழியை வேறு யாராவது மேல் (திரிணாமுல் காங்கிரஸ் மீது) தூக்கிப் போடுவார்கள். அதன் பிறகு, தேசிய புலனாய்வு முகமையை (NIA) விசாரணைக்கு அழைத்து வந்து, மாநிலத்தின் அதிகாரத்தில் தலையிடவும், தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றவும் சதி செய்கிறார்கள் என மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் சந்திப்பு! மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி!
ஏற்கனவே மால்டா மற்றும் மேதினிப்பூர் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது NIA விசாரணைக்கு மம்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது தேர்தலை ஒட்டி மீண்டும் அதே பாணியை பாஜக கையாளப் போவதாக அவர் சுட்டிக்காட்டினார். அப்பாவி மக்கள் இந்தச் சதியில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கவலைத் தெரிவித்தார்.
மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என பாஜக மறுத்துள்ளது. தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே மம்தா இதுபோன்ற கற்பனையான கதைகளைக் கூறி வருகிறார் என பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மம்தாவின் இந்தப் புகார் தேர்தல் களம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!