×
 

கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

பஹல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த சைதி துர்கா கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பாட்னா: பீஹாரில் கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கா கோவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பீஹாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கங்கை, கோசி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோர மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கங்கை ஆற்றையொட்டியுள்ள பஹல்பூர், பெகுசராய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஹல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த சைதி துர்கா கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இந்தக் கோவில், அப்பகுதி மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் மற்றும் அதனால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக கோவில் அமைந்திருந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளம் பீகாருக்கு கொண்டு வந்த ஆபத்து? விஷமாக மாறும் மீன்கள்! மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை!

கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை பார்த்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த பழமையான கோவில் வெள்ளத்தில் காணாமல் போனது அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரைகளில் மண் அரிப்பு தீவிரமடைந்துள்ளதாக பீஹார் நீர்வளத்துறை அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கங்கை வெள்ளத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு விஜய்குமார் சவுத்ரி பாட்னா திரும்பியுள்ளார். தொடர்ந்து நீர்வளத்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, வெள்ள தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

கங்கை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பீஹாரில் வெள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share