ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!
உள்ளூர் இந்து தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
கேரள மாநிலத்தில் முதன்முறையாக, சிறையில் இருக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலருக்கு அங்கேயே பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் பாஜக கவுன்சிலரான சுகதன், கேரள சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் (KAAPA) கீழ் வியுர் மத்திய சிறையில் தடுப்புக்காவலில் உள்ள நிலையில், அவருக்கு சிறையிலேயே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, திருவனந்தபுரம் மாநகர மேயர் ராஜேஷ், சிறை வளாகத்தில் உள்ள நூலகத்தில் சுகதனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிறை நிர்வாக அதிகாரிகளும் முன்னிலையில் இருந்தனர். அப்போது சுகதன், சட்ட விதிகளின்படி கடவுளின் பெயரில் உறுதிமொழி ஏற்று தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
சுகதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் கேரள அரசு அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. இதனால் வழக்கமான முறையில் மாநகராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சிறையிலேயே உறுதிமொழி ஏற்க அனுமதி கிடைத்தது.
இதையும் படிங்க: வயநாடு துயரம்... பறிபோன உயிர்கள்..! நிவாரணம் அறிவித்த கேரளா அரசு..!!
இந்த விவகாரத்தின் பின்னணியில், கடந்த உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த 20 கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், கடவுளின் பெயருக்கு பதிலாக உள்ளூர் இந்து தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் உறுதிமொழி எடுத்திருந்தனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த உறுதிமொழி சட்டபூர்வமாக செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, அனைத்து கவுன்சிலர்களும் விதிமுறைகளின்படி மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில்தான் சுகதனுக்கும் சிறையிலேயே பதவிப்பிரமாணம் நடத்தப்பட்டது. கேரள அரசியல் வரலாற்றில் இத்தகைய நிகழ்வு முதன்முறையாக பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவை கதிகலங்க வைக்கும் ஷிகெல்லா..! பதறும் மக்கள்... இதுவரை 6 பேர் பலி..!