×
 

10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்!

'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு அமலுக்கு வரும் இரண்டாம் தேர்வு என்பது மதிப்பெண் மேம்பாடுக்கானது; முதல் தேர்வை அவசியம் எழுத வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு (2026) 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பெரிய மாற்றத்துடன் நடைபெற உள்ளன. தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்படையில், இந்த ஆண்டு முதல் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் தேர்வைத் தவிர்த்து விட்டு இரண்டாம் தேர்வை மட்டும் எழுதலாமா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. இதற்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் முதல் பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் சுமார் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வு முதன்மை தேர்வாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். முதல் தேர்வை எழுதாமல் இரண்டாம் தேர்வுக்கு செல்ல முடியாது என சி.பி.எஸ்.இ. தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இரண்டாம் தேர்வு மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். இது விருப்பத் தேர்வு மட்டுமே. மதிப்பெண்களை மேம்படுத்த விரும்புவோர் அல்லது தேவைப்படுபவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம்.

இதையும் படிங்க: சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

இந்தத் தேர்வில் அதிகபட்சம் மூன்று பாடங்களுக்கு மட்டுமே எழுத முடியும். இரண்டு தேர்வுகளிலும் ஒரு பாடத்தில் எது அதிக மதிப்பெண் தருகிறதோ, அந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும். இதனால் மாணவர்களுக்கு அழுத்தம் குறையும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல மாணவர்கள் முதல் தேர்வில் நன்றாக எழுதினால் இரண்டாம் தேர்வு தேவையில்லை. ஆனால், மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பினால் அல்லது சில பாடங்களில் மேம்பாடு தேவைப்பட்டால், இரண்டாம் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். சி.பி.எஸ்.இ. அதிகாரிகள், "முதல் தேர்வு கட்டாயம், இரண்டாம் தேர்வு மேம்பாட்டுக்கான வாய்ப்பு" என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த மாற்றம் மாணவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை அளிக்கிறது. தேர்வு அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் NEP-இன் கீழ் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் இந்த விதிகளை தெளிவாக புரிந்து கொண்டு தயாராக வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: முதல்வர் பங்கேற்கும் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" மாநாடு..! பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share