×
 

அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

என்பிசிஐ தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் ஸ்டீயரிங் கமிட்டி தான் இதை முடிவு செய்யும்.

நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாளும் யுபிஐ, இதுவரை முற்றிலும் இலவசமாக இருந்ததால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொதுமக்களும் சிறு வணிகர்களும் ஒரு பைசா கூட செலுத்தாமல் பயன்படுத்திய இந்த அமைப்பு, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் முக்கிய தூணாக மாறியுள்ளது. 

இந்தச் சூழலில், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 மூலம் யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கான தற்போதைய இலவச ஏற்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவர அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, எம்டிஆர் (Merchant Discount Rate) எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல்கள் பரவியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. 

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனம் தெரிவித்தார். இந்தச் சுமை இறுதியில் சாதாரண மக்களையே சென்றடையும் என்றும், டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை இலவசமாக வைத்திருந்த சட்ட உத்தரவாதம் நீக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிலளித்தார். “ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதற்கு முன் கவனியுங்கள். எம்டிஆர் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

எம்டிஆர் மூலம் கிடைக்கும் வருவாய், வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் அதிக முதலீடு செய்ய உதவும் என்றும், இதன் பலன் அனைத்து யுபிஐ பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் விளக்கினார். இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. என்பிசிஐ தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் ஸ்டீயரிங் கமிட்டி தான் இதை முடிவு செய்யும். மசோதா நாடாளுமன்றத்தில் முழுமையாக நிறைவேறிய பிறகே இது தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார். 

இந்த மசோதா நேரடியாக கட்டணத்தை விதிக்கவில்லை. மாறாக, எந்தெந்த மின்னணு பரிவர்த்தனைகள் இலவசமாகத் தொடர வேண்டும், எதற்கு கட்டணம் விதிக்கலாம் என்பதை அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்க சட்டப்பூர்வ அடித்தளத்தை உருவாக்குகிறது. Payment and Settlement Systems Act, 2007-இன் பிரிவு 10A-ல் திருத்தம் செய்யப்படுகிறது. பெரிய வணிகர்கள் மற்றும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எம்டிஆர் பரிசீலிக்கப்படலாம் என்ற தகவல்கள் உள்ளன. சிறு வணிகர்களும் பொதுமக்களும் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

நிர்மலா சீதாராமன், மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக விவாதம் பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். யுபிஐயின் நிலைத்தன்மைக்கும், பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்பதே அரசின் நிலைப்பாடு.
 

இதையும் படிங்க: தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share