மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக்கோரியும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET) தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்றது முதலே சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வு குறித்து முதல்வர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
நீட் தேர்வால் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படுவதால், இத்தேர்வை நாடு முழுவதும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு - விசாரணை தீவிரம்!
மருத்துவ மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்களின் கல்விச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மருத்துவச் சேர்க்கையில் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வாக முதல்வர் முன்வைத்துள்ள முக்கிய யோசனை, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காகத் தனியாகப் பல லட்சங்கள் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தைத் தவிர்ப்பதன் மூலம், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறத் தனது அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களையும், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!