×
 

3 வாரம் தான் இந்தியாவில்.. மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம்.. பிரதமர் மோடியை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷ்..!

5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 8 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலகளாவிய தெற்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக டெல்லியில் இருந்து கடந்த 2ம் தேதி புறப்பட்டார் பிரதமர் மோடி.  

முதலில், அவர் கானா சென்றார். கானா நாட்டு ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில் மோடி முதல் முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்குப் ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியா-கானா இடையேயான உறவுகளை வலுப்படுத்தியதற்கும், கானாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டது. 

இதனையடுத்து டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரை சந்தித்தார். இந்திய வம்சாவளியினருடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி, விவசாயம், கனிமங்கள், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு வர்த்தகம்!! பிரேசிலில் சொல்லி அடித்தார் பிரதமர் மோடி.. அடுத்தது நமீபியா!

தொடர்ந்து 4வது நாடான பிரேசிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். சர்வதேச அரங்கில் குளோபல் சவுத் நாடுகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என பேசிய அவர், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதம் குறித்தும் கடுமையாக சாடி பேசினார். மேலும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான (The Grand Collar of the National Order of the Southern Cross) தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா சென்றார். அங்கு அவர் நமீபியா அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நமீபியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நமீபியாவில் இருந்து இன்று காலை இந்தியா வந்தடைந்தார். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மோடியை “சூப்பர் பிரீமியம் ஃப்ரீக்வென்ட் ஃபிளையர் பிரதமர்” (Super Premium Frequent Flier PM) என்று கிண்டல் செய்து, அவர் நாட்டின் முக்கிய பிரச்சினைகளான மணிப்பூர் பிரச்சினை, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றுகள், மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தோல்விகள் ஆகியவற்றில் இருந்து தப்பி ஓடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. அவர் 3 வாரங்களுக்கு நாட்டில் இருப்பார்; பின்னர், மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 மே முதல் மணிப்பூரில் நடந்து வரும் இன மோதல்களுக்கு பிறகு மோடி அங்கு செல்லவில்லை என்றும், மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது என்றும் ரமேஷ் குற்றம்சாட்டினார். இதேபோல் இந்திய விமானப்படை ஆரம்பத்தில் தோல்வியடைந்ததற்கு மோடியின் முடிவுகள் காரணம் என்று பாதுகாப்பு அதிகாரிகளின் வெளிப்பாடுகளை சுட்டிக்காட்டிய ரமேஷ், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல்களை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை மோடி மறுக்கவில்லை என்று விமர்சித்தார். மேலும் 70 நாட்களுக்கு மேலாகியும் பஹல்காம் தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன, ஆனால் மோடியின் ஆதரவாளர்கள் இந்த பயணங்கள் இந்தியாவின் உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும், BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் முக்கியமானவை என்று வாதிடுகின்றனர்.


 

இதையும் படிங்க: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்.. என்ன விருது தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share