வாக்கு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை!! ராகுல்காந்திக்கு எதிராக திரும்பிய காங்., தலைவர்!!
பீகார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஷக்கீல் அகமது தெரிவித்தார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷக்கீல் அகமது காங்கிரஸ் உறுப்பினர்பட்சத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் செயல்பாடுகள், தேர்தல் யுக்திகள், இவிஎம் மீதான குற்றச்சாட்டுகள், சீட் ஒதுக்கீட்டில் ஊழல் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், இவிஎம் முறைகேடு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.) 202 இடங்களை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் (இண்டி) கூட்டணி வெறும் 34 இடங்களில் fமட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்தது. ஓட்டு திருட்டு, இவிஎம் முறைகேடு, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இண்டி கூட்டணி முன்வைத்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: பீகார் முதலமைச்சர் யார்? பாஜக புது பார்முலா! அமித் ஷா முன் முடிந்த பரபரப்பு டீல்!!
இந்நிலையில், ஷக்கீல் அகமது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், “பீகார் தேர்தலுக்காக காங்கிரஸ் மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. ராகுல் காந்தியின் ஓட்டு அதிகார யாத்திரையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். உண்மையான வாக்காளர்கள் பங்கேற்கவில்லை.
இவிஎம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் கட்சியின் அணுகுமுறைக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. சீட் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “கட்சியிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டேன். ஆனால், தேர்தலுக்கு முன்பு அறிவிக்கவில்லை. எனது அறிவிப்பால் ஒரு ஓட்டு கூட குறையக் கூடாது என்பதற்காகவே காத்திருந்தேன். இந்த முடிவு கட்சியின் கருத்தியலுடன் முரண்பாடு காரணமல்ல. சில குறிப்பிட்ட நபர்களுடனான தனிப்பட்ட வேறுபாடுகளால் எடுக்கப்பட்டது. நான் வேறு எந்தக் கட்சியிலோ அமைப்பிலோ சேரப்போவதில்லை. காங்கிரஸ் கொள்கைகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” என்று ஷக்கீல் அகமது தெரிவித்தார்.
இந்த ராஜினாமா, காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை கட்சித் தலைமை மீது அதிருப்தி நிலவுகிறது. பீகார் தோல்வி, கட்சியின் உத்திகள், தலைமைத்துவம் குறித்து பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவிஎம் முறைகேடு குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவரே இதை ஆதாரமற்றது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமை இந்த ராஜினாமாவுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. ஆனால், உட்கட்சி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பீகார் தேர்தல் தோல்வி, 2026-ல் நடக்க உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மூச்ச்ச்!!! வாயை திறக்கவே கூடாது!! கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் மறைமுக வார்னிங்!