“குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...” - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி 'ஸ்மார்ட்' கண்காணிப்பு...!
இனி ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில், வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மேல்புறத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும், ஏறும் மற்றும் இறங்கும் தளங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிய மொத்தம் 44 அதிநவீன ஏ.ஐ. (AI) கேமராக்கள் மற்றும் டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேகம் மட்டுமல்லாமல், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விதிமீறல்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் கண்டறியும். விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், உடனடியாக அங்குள்ள டிஸ்ப்ளே போர்டுகளில் காண்பிக்கப்படும். தற்போது ஒரு மாத காலத்திற்கு சோதனை முறையில் கேமராக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!
இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், விரைவில் இவை போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!