×
 

டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

ஏஆர்எஸ்டி கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

புதுடெல்லி: டெல்லியில் 6 மாடி மாணவர் விடுதி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர் ஒருவர் உதவி கேட்டு வெளியிட்ட 11 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட மாணவர், பின்னர் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்த 6 மாடி கட்டடம் நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால், கட்டடத்துக்குள் ஏராளமான மாணவர்கள் இருந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

இந்த நிலையில், ஏஆர்எஸ்டி கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், உடல் மீது கான்கிரீட் கற்கள் விழுந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைய முடியாத சூழலிலும், தனது செல்போனை பயன்படுத்தி அவர் 11 விநாடிகள் கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் தனது நிலையை காட்டியதுடன், நண்பர்களிடம் உதவி கோரியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை மாணவர் அமைப்பு சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மீட்புக் குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து நடைபெற்ற தீவிர மீட்பு பணியில் ஆதித்யா உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் மாணவர் வெளியிட்ட வீடியோவும், அதன் பின்னர் அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share