ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார், கமாண்டோ படைகள் மற்றும் முகம், வாகன எண் கண்டறிதல் கேமராக்கள் போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன
செங்கோட்டையில் 15,000 போலீசார்! சுதந்திர தினத்துக்கு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
புதுடெல்லி: நாட்டின் 80வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் செங்கோட்டை பகுதி பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால், டெல்லி போலீசார், மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சுதந்திர தினத்தன்று மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், நேரடி போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு, நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு என இரண்டு முக்கிய பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் ‘சுதர்ஷன் சக்தி-5’ என்ற பெயரில் 18 மணி நேர கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியும் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!
இதில் டெல்லி போலீஸ், ராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பிரிவினர் பங்கேற்றனர். செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அவசரநிலைகளை எதிர்கொள்ளும் திறனும் சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் வாகன பதிவு எண்களை கண்டறியும் வசதிகளும் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை பகுதியை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 24 மணி நேரமும் நிலைமைகள் கண்காணிக்கப்படுகின்றன. குற்றப்பதிவு தரவுகளுடன் இணைக்கப்பட்ட ‘அபிக்யான்’ செயலி மூலமும் அடையாளச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பட்டம் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, விரைவு நடவடிக்கை குழுக்கள், கண்காணிப்பு குழுக்கள், கமாண்டோ படையினர், துப்பாக்கிச் சுடும் வீரர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்ட நெரிசல் அல்லது அவசரநிலைகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருப்பார்கள்.
சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!