கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி கோரிக்கை!
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் மற்றும் விஜயகாந்திற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமரிடம் தேமுதிக எம்பி எல் கே சுதீஷ் மனு அளித்துள்ளார்.
தேமுதிக கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் B.A., MP, இன்று புதுடெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, மேகதாது அணை விவகாரம் மற்றும் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்திற்கு 'பாரத ரத்னா' விருது வழங்குதல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிகைச் செய்தி அறிக்கையின்படி, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உரிமையைப் பறிக்கும் நோக்கிலும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளை மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என எல்.கே.சுதீஷ் எம்.பி. வலியுறுத்தினார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரியக் காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்து விட ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மாவோயிசத்தை ஒழித்ததில் CRPF பங்களிப்பு மகத்தானது! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
இத்துடன், தேமுதிக நிறுவனத் தலைவரும், மறைந்த பத்மபூஷன் டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் கலை மற்றும் சமூகப் பணிகளைப் போற்றும் வகையில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற தேமுதிகவின் நீண்டகாலக் கோரிக்கையையும் பிரதமரிடம் அவர் அதிகாரப்பூர்வ மனுவாகச் சமர்ப்பித்தார்.
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி.யின் இந்தத் திடீர் டெல்லி பயணம் மற்றும் பிரதமருடனான சந்திப்பு, தமிழக அரசியல் களத்திலும் விவசாயப் பெருமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!