×
 

“அடிமை என்று சொல்பவர்கள் கண்ணாடியைப் பார்க்கட்டும்!” - முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!

திமுக-வின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்விற்குப் பிறகு தனது தொண்டர்களுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், ஈரோடு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட எண்ணற்ற நிபந்தனைகளையும், முட்டுக்கட்டைகளையும் அநாயாசமாக எதிர்கொண்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி கண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். "நம்மால் கூட்டம் சேர்க்க இயலாது என்று எழுதியவர்களே, இன்று கூட்டம் சேருவதைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றனர். அவர்கள் எழுதிய தலையங்கங்கள் எல்லாம் முரணொலியாக மாறிப்போய், அவர்களின் பழைய பேனாக்களே அவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றன" என திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேட்டை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் பேசிய 'பழைய அடிமை, புதிய அடிமை' என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள விஜய், "யார் மீதோ கல்லெறிவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று பேசுகிறார்கள். 1999 முதல் 2003 வரை தாமரை மலரத் தமிழ்நாட்டில் தடம் போட்டுக் கொடுத்து, முதல் அடிமையாக இருந்த வரலாற்றை அவர்கள் மறைக்க முடியாது. இன்று குறைந்தபட்ச செயல்திட்டம் என்று பேசி மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் குட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது" எனத் தனது கடிதத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி அரசியலில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள விஜய், இளைஞர்களும் பெண்களும் தவெக-வின் பக்கம் அணிவகுத்து நிற்பது எதிரிகளுக்குக் குமைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "எதிரிகளின் ஏசுதல்களைப் புறந்தள்ளி, ராணுவக் கட்டுப்பாடுடன் களமாடுங்கள். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களைச் சேர்க்கும் பணியில் கழகத் தோழர்கள் இப்போதே துரிதமாக இறங்க வேண்டும்" என அவர் ஆணையிட்டுள்ளார். செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி என்று குறிப்பிட்டுள்ள அவர், விவேகத்துடன் செயல்பட்டு 2026-ல் வரலாறு படைப்போம் எனத் தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: தந்தை பெரியார் நினைவை போற்றுவோம்... முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...!

இதையும் படிங்க: கருப்புக்கொடிக்கு அஞ்சமாட்டோம்! பல்லடத்தில் கனிமொழி எம்.பி ஆவேசப் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share