×
 

எல்லையை பாதுகாக்க தயாராகும் பெண் சக்திகள்!! உருவாகுது புதிய படை! தயாராகும் பிரத்யேக முகாம்கள்!

இந்தியா - சீனா எல்லையில், பாதுகாப்பு பணியில் வீராங்கனையரை நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

புது டெல்லி: இந்தியா-சீனா எல்லையில் பாதுகாப்புப் பணியில் வீராங்கனையரை அதிக அளவில் ஈடுபடுத்த மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள 32 சோதனைச் சாவடிகளில் வீராங்கனையருக்கென பிரத்யேக முகாம்களை அமைக்கும் பணியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) தீவிரமாக இறங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்திய ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்போது சுமார் 4,000 வீராங்கனையர் பணியாற்றி வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் மேலும் 1,375 பெண்களை பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - சீனா இடையே பகையை வளர்க்க திட்டம்! கோள் மூட்டும் அமெரிக்கா! மூக்குடைப்பு!

கடந்த மாதம் ஐடிபிபி இயக்குநர் ஜெனரல் பிரவீன் “எல்லையில் வீராங்கனையருக்கென பிரத்யேக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்தியா-சீனா எல்லையில் இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு முகாமிலும் 30 வீராங்கனையர் தங்க முடியும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று பேர் பகிர்ந்து கொள்ளும் அறைகளும் உயரதிகாரிகளுக்கு தனி அறைகளும் அமைக்கப்படுகின்றன.

கடும் குளிரைத் தாங்கும் வகையில் வெப்பக் காப்பு வசதி, நவீன சமையலறை, கழிப்பறை வசதிகள் கொண்டதாக முகாம்கள் உருவாக்கப்படுகின்றன. பலத்த காற்றில் இருந்து பாதுகாப்பும் சூரிய வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த நடவடிக்கை எல்லைப் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சி பெண் வீரர்களின் திறனை அங்கீகரிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 16,000 அடி உயரத்தில் சாலை! சீனா எல்லையில் இமயமலையில் இந்திய ராணுவம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share