ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சொந்தம் கொண்டாடும் சீனா, பாக்., அரசுகள்!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்படும் சதிவலை!
'ஜம்மு - காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, பாகிஸ்தான் - சீனா இடையே 1963ல் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு (Shaksgam Valley) இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீனா அப்பகுதியை தனது சொந்தமாக உரிமை கோருவதையும், அங்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் செய்ய முயல்வதையும் இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் சீனா நெருக்கமாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டம் மிகப் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சாலைகள், ரயில்வே, எண்ணெய் குழாய்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள் அடங்கும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு வழியாக செல்கிறது. இதனால் சீனா அப்பகுதியை தனது நாட்டுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானும் சீனாவும் செய்துகொண்ட எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்பகுதியின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டதாக சீனா வாதிடுகிறது.
இதையும் படிங்க: எல்லையை பாதுகாக்க தயாராகும் பெண் சக்திகள்!! உருவாகுது புதிய படை! தயாராகும் பிரத்யேக முகாம்கள்!
இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “1963-ல் பாகிஸ்தானும் சீனாவும் செய்த எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது. இந்தியா அதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி” என்று தெளிவாகக் கூறியுள்ளது.
ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறுகையில், “1963 ஒப்பந்தம் செல்லுபடியாகாது. எனவே அப்பகுதியில் எந்த உள்கட்டமைப்பு பணிகளையும் தொடங்க இந்தியா அனுமதிக்காது. அது சட்டவிரோதமான செயல்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் மீண்டும், “ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தம். அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “முழு ஜம்மு - காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். இதை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். 1963 ஒப்பந்தம் சட்டவிரோதமானது, செல்லாதது. இந்திய பகுதியில் உள்கட்டமைப்பு மேற்கொள்வது சட்டவிரோதமானது. அதை ஏற்க முடியாது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் இந்தியா - சீனா - பாகிஸ்தான் உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - சீனா இடையே பகையை வளர்க்க திட்டம்! கோள் மூட்டும் அமெரிக்கா! மூக்குடைப்பு!