×
 

டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள்!! 15 நாட்கள் கெடு! சாட்டையை சுழற்றிய மத்திய அரசு!

சினிமா திருட்டு புகார்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் , 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு டெலிகிராம் செயலிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக பகிரப்படுவது தொடர்பாக மத்திய அரசு டெலிகிராம் நிறுவனத்திற்கு கடுமையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருட்டு திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை மீறும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றுவதுடன், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில், டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டு திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்கள் இந்திய திரைப்படத் துறை, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பதிப்புரிமை மீறும் உள்ளடக்கங்களை கண்டறிந்து உடனடியாக நீக்குவதற்கு டெலிகிராம் நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை அரசு அல்லது உரிமையாளர்கள் புகார் அளித்த பிறகே குறிப்பிட்ட சேனல்களை நீக்கும் நடைமுறையை டெலிகிராம் பின்பற்றி வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இனி அந்த நடைமுறை போதாது என்றும், அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல், பதிப்புரிமை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து தானாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!

நோட்டீஸில், இந்தியாவில் பதிப்புரிமை மீறல் என்பது சாதாரண சிவில் பிரச்சினை மட்டுமல்ல என்றும், 1957-ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராப் சட்டத்தின்படி இது கடுமையான கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய அரசு நினைவூட்டியுள்ளது.

அரசின் உத்தரவுகளை முறையாக பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இணைய தளங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், டெலிகிராம் நிறுவனம் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, திருட்டு திரைப்படங்கள் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை பகிர்ந்ததாக கண்டறியப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தின் போது டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தற்காலிகமாக ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு சேவை மீண்டும் தொடங்கியது. தற்போது திரைப்படத் திருட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கை, டிஜிட்டல் தளங்களில் பதிப்புரிமை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share