×
 

பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியாவின் அதிரடி! ஜேசிபியுடன் களமிறங்கிய அதிகாரிகள்!

தூதரகங்களின் பாதுகாப்பு, அவற்றைச் சுற்றியுள்ள கட்டமைப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் சூழலில், டெல்லியில் நடந்த இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகளை மத்திய அரசு அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். சாணக்யபுரி பகுதியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, பொது பாதையை ஆக்கிரமித்து சில கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் போக்குவரத்துத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சில கட்டமைப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூதரக வளாகத்துக்கு வெளியே பொது பயன்பாட்டுக்கான இடத்தை ஆக்கிரமித்து கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து மத்திய அரசு தரப்பில் விரிவான விளக்கம் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: 23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடக் கம்பங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் அகற்றியிருந்தனர். இதையடுத்து டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தூதரக ரீதியிலான சூழலும் சமீபகாலமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், ஸ்ரீநகருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என கருத்து தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் பாராட்டியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து தனது ஆட்சேபனையை பதிவு செய்திருந்தது. இந்த பின்னணியில், டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையும் அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தூதரகங்களின் பாதுகாப்பு, அவற்றைச் சுற்றியுள்ள கட்டமைப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் சூழலில், டெல்லியில் நடந்த இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share