பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!
இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என ஐ.நா சபையின் இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கடும் வார்த்தைப் போர் நடந்தது. பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு உடனடியாக இந்தியாவின் ஐ.நா. பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரிஷ் தனது உரையில், "பாகிஸ்தான் பிரதிநிதியின் கருத்துகள் எனது நாட்டையும் மக்களையும் தீங்கிழைக்கும் ஒரே நோக்கத்துடன் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் கொடுத்த விளக்கம் பொய்யானது மற்றும் சுயநலமானது" என்று குறிப்பிட்டார்.
2025 ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகவே மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. இது அளவுக்குட்பட்ட, எஸ்கலேஷன் இல்லாத, பொறுப்பான நடவடிக்கை என்று ஹரிஷ் விளக்கினார்.
இதையும் படிங்க: பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?! மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!
பாகிஸ்தான் மே 9 வரை இந்தியா மீது மேலும் தாக்குதல் நடத்தும் என்று அச்சுறுத்தி வந்த நிலையில், மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தை நேரடியாக தொடர்புகொண்டு சண்டையை நிறுத்த கெஞ்சியது என்ற உண்மையை ஹரிஷ் வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் விமான தளங்கள், ஓடுபாதைகள், விமான கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட படங்கள் பொதுவெளியில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"பயங்கரவாதத்தை பாகிஸ்தான் விரும்புவது போல இயல்பாக்க முடியாது. பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் கருவியாக தொடர்ந்து பயன்படுத்துவதை உலகம் சகித்துக்கொள்ள முடியாது. இந்த புனிதமான ஐ.நா. மன்றம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் தளமாக மாற முடியாது" என்று ஹரிஷ் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், "இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் முதலில் சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும்" என்று தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.
இந்த கடும் பதிலடி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிப்பதை உலகம் முன்னிலையில் இந்தியா தோலுரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா கொடுத்த தரமான அடி! பாக்., பயங்கரவாதி அலறல்! ஆபரேசன் சிந்தூரின் மறுபக்கம்!