நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!
ஜூன் 21 நீட் மறுதேர்வு வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படை பயன்படுத்தபடவுள்ளது.
தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்ட நீட் இளநிலை (NEET-UG) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறை எவ்விதத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் தேசிய தேர்வு முகமை (NTA), வினாத்தாள்களின் பாதுகாப்பிற்காக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய விமானப்படையை (IAF) களமிறக்க அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 18 முக்கிய விமானப்படை தளங்களுக்கு ராணுவ ரகசிய பாதுகாப்புடன் இந்த வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து ஜிபிஎஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நாடு முழுவதும் உள்ள 551 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் துல்லியமான நேரக் கட்டுப்பாட்டுடன் கொண்டு சேர்க்கப்படும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது குறித்துப் பேசிய என்டிஏ (NTA) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங், வினாத்தாள் கசிவு அல்லது இதர முறைகேடுகள் நடப்பதைத் தடுத்து, தேர்வு முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த முறை சாலை வழிப் போக்குவரத்தின் போது ஏற்படும் மனித தவறுகள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்கவே ராணுவ லாஜிஸ்டிக்ஸ் (Defense Logistics) பயன்படுத்தப்படுகிறது. மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்க ஏஐ (AI) தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் மொபைல் சிக்னல் ஜாமர்கள் போன்ற பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிபிஐ விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இந்திய ராணுவத்தின் இந்த மாஸ் என்ட்ரி நீட் தேர்வை எவ்வித தங்குதடையுமின்றி நடத்தப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் மோசடி வழக்கு: ஜூலை 2க்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!